சென்னை,
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் அதிகம் ஆகும்.
தமிழகத்தில் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆட்டோவில் செல்வதற்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50-ம், அதனைத்தொடர்ந்து செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக ரூ.25-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 13 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 27-ந்தேதி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்து இருக்கிறது.
இந்தியாவில் உள்ள பெருநகரங்களோடு ஒப்பிட்டால் தமிழகத்தில்தான் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் அதிகம் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக பெங்களூருவில் ஆட்டோவில் 2 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கான அடிப்படை கட்டணம் ரூ.36 ஆக உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி, திருவனந்தபுரம், ஆமதாபாத்தில் 1.5 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவில் செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30-ம், மும்பை, லக்னோ, பாட்னாவில் 1.5 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கான அடிப்படை கட்டணமாக ரூ.26-ம் வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவில் ஆட்டோவில் 2 கிலோ மீட்டர் தூரம் செல்லவும், ராஞ்சி, டேராடூனில் 1.5 கிலோ மீட்டர் தூரம் செல்லவும் ரூ.25 குறைந்தபட்ச கட்டணமாக இருக்கிறது.
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் மற்ற மாநிலங்களைவிட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளபோதிலும், அரசு குறிப்பிட்டுள்ள கட்டணத்தை ஆட்டோ டிரைவர்கள் வாங்குவதில்லை. மாறாக அதையும் தாண்டி தங்கள் இஷ்டத்துக்கு பேரம் பேசி வாங்குகிறார்கள் என்பது வாடிக்கையாளர்களின் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.