தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால், புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

நாளை கூட இருக்கும் தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மே மாதம் 10-ந் தேதி, முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார்.

சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்

4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாளை (புதன்கிழமை) சட்டசபை மீண்டும் கூடுகிறது.

காலை 10 மணிக்கு கூடும் சட்டசபை கூட்டத்தில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால், புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண்மைக்கு தனி பட்ஜெட்

நாளை மறுநாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது த.வெ.க. ஆட்சியிலும் தொடர்கிறது. வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

அடுத்த சில நாட்கள், இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். எத்தனை நாட்கள் என்பது, நாளை மதியம் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன?

பட்ஜெட் மீதான விவாதம் முடிந்தவுடன், தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், ஒவ்வொரு நாளும் 2, 3 வீதம் எடுத்துக்கொள்ளப்பட்டு, சுமார் 1½ மாதங்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

ஏற்கனவே, த.வெ.க. தேர்தல் அறிக்கையில், "குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்ககள், திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன், குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு, ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம்" என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம்

ஏற்கனவே, த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இதேபோல், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற 200 யூனிட் மின்சாரம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.