தமிழக செய்திகள்

தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல்: மாநில நிதிக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் வரை நீட்டிப்பு

தமிழகத்தில் கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

சென்னை,

மாநில நிதிக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழக உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 27 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 92 ஆயிரம் உள்ளாட்சி பதவிகள் காலியாகின.

அதன்பின்னர், ஊரக உள்ளாட்சி பணிகளை கவனிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், சிறப்பு அதிகாரிகளின் பணிக்காலம் மட்டுமே நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டாலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க.வே கோலோச்சியதால், இன்னும் பதவியில் இல்லாத பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

நிதிக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

இதனால், விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, உள்ளாட்சி பதவிகளையும் கைப்பற்ற த.வெ.க. திட்டமிட்டு வந்தது. ஆனால், த.வெ.க. அரசின் தற்போதைய நடவடிக்கையால், உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகும் என்றே தெரிகிறது.

அதாவது, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்து, மாநில அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்க கடந்த ஆண்டு 7-வது மாநில நிதிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு 31-ந் தேதியுடன் முடிவடைய இருந்தது. எனவே, அதற்கு முன்னதாக தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது?

இதனால், தமிழக உள்ளாட்சி தேர்தல் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளும் நிலுவையில் இருப்பதால், அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.