தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை கிராமத்தில், 60 ஆண்டு கால பொது கிணற்றை ஆக்கிரமித்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் மீது கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனைவிளை கிராமத்தில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் பழமையான ஊர் கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலத்தடி நீர் ஆதாரத்தை அந்த பகுதி மக்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு சொந்தமான அந்த பழமையான கிணற்றை, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பிரமுகரான அமைச்சர் ஜெகதீஸ்வரி என்பவர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கேட்ட போது, இந்தக் கிணற்றை ஊர் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக எங்கள் முன்னோர்கள் எந்தவொரு பத்திரமும் எழுதித் தரவில்லை.
இது எங்களுக்குச் சொந்தமானது" என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, "இனிமேல் இந்த ஊரில் யாரும் இந்தக் கிணற்றுப் பக்கமே வரக்கூடாது, தண்ணீரும் எடுக்கக் கூடாது" என தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.