கோவை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது.
118 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மை இல்லாத சூழலில், த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பயனாக காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது. அக்கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார்.
இதனை தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு கவர்னர் அர்லேகர் முன்னிலையில், முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் விஜய்யுடன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதன்பின்னர் சட்டசபையில், 13-ந்தேதி த.வெ.க.வின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இதன்படி அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. எனினும், பின்னர் அந்த இலாகாவுக்கு பதிலாக வருவாய் துறைக்கான அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மூத்த அமைச்சரான செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளது என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.