தமிழக செய்திகள்

‘தமிழகத்திற்கு தெய்வ சக்திதான் தேவை’ - தமிழிசை சவுந்தரராஜன்

தெய்வசக்தி வேண்டுமென்றால் மக்கள் பா.ஜ.க.விற்கு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விழுப்புரத்தில் சிறுமி காணாமல் போன விஷயத்தில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று நான் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். நேற்று அரியலூரில் மது குடித்ததை தட்டி கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை கவனமாக பார்க்க வேண்டும்.

மின்வெட்டு ஏற்படாமல் பார்க்க வேண்டும். விலைவாசி உயராமல் பார்க்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு பேருந்து கட்டணங்கள் எல்லாம் பல மடங்கு ஏறி இருப்பதாக கேள்விப்படுகிறோம். ஆட்சி அதிகாரத்தை தி.மு.க.விடம் இருந்து மக்கள் த.வெ.க.விற்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால், கொஞ்சமாவது மாற்றம் இருக்க வேண்டும்.

ஆனால் எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. இருப்பினும், ஊழல்வாதிகளை எதிர்த்து அவர்கள் கைது செய்திருக்கிறார்கள். அதை அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் அதற்காக யாரையும் தூய சக்தி என்று காண்பித்துக் கொள்ள முடியாது. தி.மு.க.வை தீய சக்தி என்றும், தங்களை தூய சக்தி என்றும் த.வெ.க. கூறியது. ஆனால் அவர்கள் தூய சக்தியாக பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. தூய சக்தி என்று சொன்னவர்கள் தூய சக்தியாக இல்லை. உண்மையிலேயே தமிழகத்திற்கு தெய்வ சக்திதான் தேவை. தீய சக்தி தீய சக்தியாகத்தான் இருந்து வருகிறது.

பா.ஜ.க. 21 மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தெய்வசக்தி வேண்டுமென்றால் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி போல் தேர்தல் இன்றி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் நாங்கள் இல்லை. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT