சென்னை,
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance TN) என்ற தொழில் வழிகாட்டுதல் அமைப்பில் பணியாற்றி வந்த 15 பேர், தமிழ்நாட்டின் முதலீட்டு தரவுகளை பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும், அதன் காரணமாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பில் பணியாற்றியவர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்ததாகவும் வெளியான தகவல் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் மொத்தமாக விலகியதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஜூலை 2026-ல் ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ ஊழியர்கள் கூட்டாக ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் தவறானது. ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ நிறுவனத்தில் இருந்து மொத்தமாக பணி விலகல்கள் எதுவும் நடைபெறவில்லை. பணியாளர் விலகல் என்பது ஒரு நிறுவனத்தில் நிகழும் இயல்பான நிகழ்வாகும். ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ நிறுவனத்தில், சிறந்த தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம், மற்றும் தனிப்பட்ட அல்லது குடும்பக் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகப் பணியாளர்கள் விலகுகின்றனர்.
வேறு இடங்களில் வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர்கள் உட்பட, தனது பணியாளர்களின் தொழில்முறை விருப்பங்களுக்கு ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ எப்போதும் மதிப்பளித்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு எப்போதும் தனது அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியைப் பேணி, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு தொடர்ந்து ஒரு விருப்பமான முதலீட்டு இடமாக திகழ்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘ஆந்திராவின் முக்கிய ரகசியம் கசிந்துவிட்டதாக' ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் நாரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய ரகசிய முதலீட்டுத் திட்டம் கசிந்துள்ளது. அதற்கு 'முதலீட்டாளர்களுக்கு அன்றே பதிலளித்தல்' என்று பெயர். இதைத் தாராளமாக நகலெடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.