தமிழக செய்திகள்

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு இனி ஆன்லைனில் அனுமதி - அரசு புதிய திட்டம் அறிமுகம்

புதிய முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியைப் பெறும் நடைமுறைகளை எளிமையாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தடையில்லா சான்றிதழ்

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேவையான அனுமதிகளை முற்றிலும் இணையவழியில் பெறும் வகையில் புதிய முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி கூறுகையில், "இந்த முன்னோடி திட்டத்தின் மூலம், திரைப்படத்துறையினர் பல்வேறு துறைகளில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற முடியும். இதற்கு முன்பு, அனுமதி பெறுவதற்காகப் பல அலுவலகங்களை அவர்கள் அணுக வேண்டியிருந்தது" என்றார்.

இணையவழியில் படப்பிடிப்பு அனுமதி

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் படப்பிடிப்புத்தளங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியும் இந்த முன்னோடித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, படப்பிடிப்பு நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பம் பெறப்பட்டதும், அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

யாருக்கு என்ன பொறுப்பு?

சென்னையை பொறுத்தவரை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக அதிகாரிகள் இதற்குப் பொறுப்பாவார்கள்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர்களின் பொதுப் பிரிவு நேர்முக உதவியாளர்கள் இதற்குப் பொறுப்பு வகிப்பார்கள்.

"அவர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டவுடன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் படப்பிடிப்புக்கான அனுமதி வழங்கப்படும்" என அந்த அதிகாரி தெரிவித்தார்.

48 மணி நேரத்திற்கு முன்பே எச்சரிக்கை

தகவல் தொடர்பில் எந்தவித இடையூறும் ஏற்படுவதைத் தவிர்க்க, எச்சரிக்கை அறிவிப்பு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலக அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை தகவல் சென்றடையும்.

அதிகாரிகள் நியமனம்

மேலும், உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதை உறுதி செய்ய அந்தந்தத் துறைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள்.

விரைவில் முழுமையாக

இந்த முன்னோடித் திட்டம் குறித்த கருத்துகள் பெறப்பட்ட பிறகு, இத்திட்டம் முழுமையாக தொடங்கி வைக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT