சென்னை,
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களே நடைபெறாத ஒரு தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதை. தன்னுடைய கனவாக நினைத்து முதல்-அமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார்.
அவரது கனவை நனவாக்கும் வகையில் தென்மாவட்டங்களில் பாலியல் குற்றவாளிகளை ஒழித்துக்கட்டுவதற்காக ஒரு சிறப்பு அதிரடி திட்டம் ஒன்றை, தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கையும் தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயேந்திர பிதாரி நேற்று அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-
நான் சர்வதேச போலீசில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். சர்வதேச போலீசில் பாலியல் குற்றவாளிகளை 8 வகைகளாக பிரித்துள்ளனர். அவர்கள் செய்யும் குற்றங்களின் தன்மைக்கேற்ப தனித்தனி வண்ணங்கள் (நிறம்) கொடுக்கப்படும். இந்த வண்ணங்களில் இடம்பெற்றுள்ள பாலியல் குற்றவாளிகள், தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீதான குற்றங்களை முறையாக கோர்ட்டில் ஆவணப்படுத்தி, உரிய தண்டனை பெற்று தருவதில் முனைப்பு காட்டப்படும்.
இதுபோன்ற திட்டத்தை தெற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கடந்த ஒரு மாதமாக நான் அமல்படுத்தியுள்ளேன். குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு குற்றத்தையும் 8 வண்ணங்களாக (நிறம்) வகைப்படுத்தியுள்ளோம். இதில் மிகவும் அபாயகரமான பாலியல் குற்றங்கள் சிவப்பு வண்ணத்தில் இடம்பெறுகிறது. இந்த திட்டம் தென் மாவட்டங்களில் நல்ல பலனை கொடுக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.