கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் - 22-ந்தேதி நடைபெறுகிறது

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

போலியோ சொட்டு மருந்து முகாம் 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறும். மேற்காணும் 6 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 6,647 மையங்களில் நடைபெறும்.

இம்மையங்களில் 9.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் 2,70,679 குழந்தைகள், மயிலாடுதுறையில் 69,386 குழந்தைகள், சிவகங்கையில் 1,16,871 குழந்தைகள், தஞ்சாவூரில் 1,82,485 குழந்தைகள், திருநெல்வேலியில் 1,32,999 குழந்தைகள் மற்றும் விருதுநகரில் 1,44,075 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

1. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

2. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

4. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

5. சொட்டு மருந்து செலுத்தப்படாமல் விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

6. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7. புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

8. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 320 அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

9. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் உள்ள பயண வழி மையங்களில் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

10. நடமாடும் சுகாதார குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

11. போலியோ சொட்டு மருந்து மையங்களில் 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவதால், தமிழ்நாடு கடந்த 22 ஆண்டுகளாக போலியோ நோயின்றி உள்ளது. ஆனால், அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுவதால், “இந்திய போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனை குழு” (IEAG) முக்கியமான குறியீட்டு அளவுகோள்களை அடிப்படையாகக் கொண்டு, 21 மாநிலங்களிலுள்ள 272 மாவட்டங்களை பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் கண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனால், போலியோ நோயில்லாத நிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், போலியோ வைரஸ் பரவல் வாய்ப்புகளிலிருந்து நம்முடைய குழந்தைகளை பாதுகாக்கவும், அனைத்து பெற்றோர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT