சென்னை,
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நேற்று மாநிலத்தின் 2வது பொருளாதார அறிக்கை வெளியானது. மாநில திட்டக்குழு தயாரித்த 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் முருகானந்தம், திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன். நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சம்கள்:-
கடந்த 2024-25-ம் ஆண்டின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமிழ்நாடு 9.4 சதவீதம் பங்களிப்பை அளித்துள்ளது.
உற்பத்தி துறையில் 14.74 சதவீத வளர்ச்சியை பெற்று இந்தியாவில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
மேலும், உற்பத்தி துறை வேலை வாய்ப்புகளில் நாட்டின் மொத்த தொழிற்சாலை பணியாளர்களில் தமிழ்நாடு 15 சதவீதத்துடன் முன்னணி பங்களிப்பாளராக விளங்குகிறது.
மின்னணு சாதனங்கள், ஜவுளி, தோல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றும தியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்த நிதியாண் டில் வணிக பொருட்கள் ஏற்றுமதி 52.07 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
தமிழ்நாட்டின் சராசரி வருமானம் 2024-25-ல் ரூ.3.62 லட்சத்தை எட்டி, தேசிய சராசரியான 2.05 லட்சத்தை காட்டிலும் 1.77 மடங்கு அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் வழித்தட திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
2030-ல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு தகுந்த நிலையில் தமிழகம் இருக்கிறது.
தமிழகத்தில் வேளாண் துறையானது ரூ.1.9 லட்சம் கோடி பங்களிப்பை அளித்து வருகிறது. 2024-25-ல் கேழ்வரகு, கரும்பு விளைச்சலில் தமிழகம் முதலிடத்தையும், எண்ணெய் வித்துக்களில் 2-ம் இடத்தையும், நிலக்கட லையில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.
2023-24-ல் சுமார் 2.99 கோடி விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதே நிதியாண்டில் தமிழ்நாட்டின் தொழிலாளர் பங்கேற்பானது 72.1 சத வீதமாக உயர்ந்துள்ளது. உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 47.3 சத வீதத்துடன் மூன்றாமிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆய்வறிக்கை சம்பந்தமாக மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறை களில் ஏற்பட்டு இருக்கக்கூடிய வளர்ச்சிகள் குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் கூறி உள்ளோம். விலைவாசி எப்படி உயர்ந்துள்ளது? எப்படி அதை சரி செய்துள்ளோம் என்பதை தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.
தொழில்துறை வேகமாக வளர்வதன் காரணமாக வேளாண் துறை பங்களிப்பு குறைந்து கொண்டு செல்கிறது. தமிழ்நாட்டில் 25 சதவீதம் தான் வேளாண் துறை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். வேளாண் துறை பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தொழில்துறையில் பிரமாண்ட வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது. நீண்ட கடற்கரை நம்மிடம் உள்ளது. ஆனால் நம்மிடம் கப்பல் கட்டும் தொழில் இல்லாமல் இருப்பது ஒரு குறையாக இருந்தது. ஆனால், அது இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.
மற்ற எல்லா தொழில்களையும் விட மிகப்பெரிய வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழிலாக கப்பல் கட்டும் தொழில் இருக்கும். மத்திய அரசு வெளியிட்டுள்ள நாட்டின் சராசரி பொருளாதார வளா்ச்சி விகிதத்தைவிட (7.4 சதவீதம்) தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த 2024-25 நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 11.2 சதவீதமாக இருந்த நிலையில், நிகழ் நிதியாண்டிலும் இது இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15 சதவீத பங்களிப்பை வழங்கி, அனைத்து மாநிலங்களையும்விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத் (13 சதவீதம்), மராட்டியம் (13 சதவீதம்) போன்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னிலையில் இருப்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
நாட்டின் உற்பத்தித் துறை வளா்ச்சி 4.5 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் உற்பத்தித் துறை வளா்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாக 14.7 சதவீதமாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, மின்னணுவியல் ஏற்றுமதியில் நாட்டின் பங்களிப்பில் 41 சதவீதம் தமிழகத்திலிருந்து மட்டுமே கிடைக்கிறது. நிகழாண்டு அறிக்கையில் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து தனி அத்தியாயம் இடம்பெற்றுள்ளது.
1,076 கி.மீ. கடற்கரையைக் கொண்ட தமிழகத்தின் கடல் சாா் பொருளாதார வளா்ச்சி குறித்த புதிய திட்டங்கள், 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டுவதற்கான இலக்கு உள்ளிட்டவை இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.