கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மதவெறி சக்திகளின் சதி செயல்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - மார்க்சிஸ்ட் கம்யூ.

மரபையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்த த.வெ.க அரசுக்கு பாராட்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

மதவெறி சக்திகளின் சதி செயல்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக ஏற்றப்பட்டு வந்த உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கல்தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் இந்த ஆண்டும் வழமைபோல் ஏற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மரபுகளையும், பாரம்பரியத்தையும் பின்பற்றும் வகையிலும், பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடும் அழுத்தங்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் த.வெ.க அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

சங்பரிவாரத்தின் ஆத்திரமூட்டலுக்கும் திசைதிருப்பல்களுக்கும் இரையாகாமல் வழக்கம்போல் மக்கள் திருக்கார்த்திகை விழாவை கொண்டாடியுள்ளனர். கடந்த ஆண்டு திருக்கார்த்திகை விழாவின்போது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திய ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த ஆண்டும் அதேபாணியில் தேவையில்லாமல் இப்பிரச்சனையில் தலையிட்டது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது வரம்புமீறி உள்நோக்கத்துடன் செயல்படும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

மதவெறி சக்திகளின் சதி செயல்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT