புதுடெல்லி,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதன்படி முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு;-
“*நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
* திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.
* மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு த.வெ.க. அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது.
* குலசேகரப்பட்டினம் விண்வெளி உற்பத்தி மையத்தை, தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும்.
* காலநிலை தாங்குதன்மை பெருந்திட்டத்தை தொடங்க வேண்டும்.
* அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் ஒன்றை தமிழ்நாடு அரசு முன்மொழிகிறது.
* சென்னை-குமரி அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.
* செங்கல்பட்டு-திருச்சி ஜி.எஸ்.டி. சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
* திருச்சி-கரூர், கரூர்-கோவை சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும்.
* ஒகேனக்கல் 3-ம் கட்ட கூட்டுக்குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி நிதியை வழங்க வேண்டும்.
* இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் மீன்படி உரிமையை பாதுகாத்து, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டிற்கான 2-வது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமைக்க அனுமதிக்க வேண்டும்.
* தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.
* கல்வி நிதியை விடுவிக்க புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நிர்பந்திக்கக் கூடாது.
* இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த விழைகிறோம்.
* பெண்களின் பாதுகாப்பிற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் தேவை.
* அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் ஒன்றை முன்மொழிகிறோம்.”
இவ்வாறு முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.