தமிழக செய்திகள்

அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு அணி சாதனை

அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு அணி 13 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்னை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி 13 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

69-வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி-2025 மராட்டிய மாநிலம், நாக்பூரில் இவ்வாண்டு மார்ச் 29 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 21 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம் மற்றும் 7 மத்திய காவல் அமைப்புகளைச் சேர்ந்த 1,327 காவல்துறையினர் மற்றும் 144 காவல்துறையினரால் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் பங்கேற்றன.

இப்போட்டிகளில் பங்கேற்க இருந்த 76 பங்கேற்பாளர்கள் மற்றும் 7 மோப்ப நாய்கள் அடங்கிய தமிழ்நாடு காவல்துறை அணிக்கு, தற்போதைய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் தினகரன் அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் வண்டலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த நான்கு மாதங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் பாபு அணி மேலாளராக செயல்பட்டார்.

குற்ற புலனாய்வில் அறிவியல் உதவிகள் (SAI), கணினி விழிப்புணர்வு, நாசவேலை எதிர்ப்பு சோதனை (ASC), போலீஸ் வீடியோகிராபி, போலீஸ் புகைப்படம் எடுத்தல் மற்றும் மோப்ப நாய்களுக்கான போட்டி என ஆறு முக்கிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு காவல்துறை அணி மொத்தம் 13 பதக்கங்களை (5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம்) வென்றது. இதன் மூலம் இப்போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை பெற்ற அணியாக தமிழ்நாடு காவல் அணி முதலிடத்தை பிடித்தது. இப்பதக்கங்கள் மட்டும் அல்லாது குற்ற புலனாய்வில் அறிவியல் உதவிகள் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியானது வெற்றியாளர் கோப்பையையும், அதே பிரிவில் மூன்றாம் இடத்திற்கான கோப்பையையும் வென்றுள்ளது. சென்ற ஆண்டு தமிழ்நாடு காவல்துறை அணி இப்போட்டிகளில் மொத்தம் 5 பதக்கங்களை மட்டுமே (2 தங்கம், 3 வெள்ளி) வென்றது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் பங்கேற்று சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தி தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்த இவ்வணிக்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று தனது பாராட்டுதல்களை தெரிவித்ததோடு வெற்றி பெற்ற காவல் ஆளினர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதக்கம் பெற்றவர்களின் விவரம்:-