சென்னை,
மாநில அரசு நன்கு ஆராய்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பதும், அதில் உறுதியாக இருப்பதும் அவசியம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவற்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை கடந்த புதன்கிழமை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அதற்கு அடுத்த நாளே ரத்து அறிவிப்பை ரத்து செய்து ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளது. அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டன. அதன்பின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றமும் ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக கடந்த 14-ம் தேதி புதன் கிழமை தமிழக அரசு அறிவித்தது. அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்யும் அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டதாகவும், அதை திரும்பப்பெற்று ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடருவதாகவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்படும் என்பது தெரியவில்லை. அரசின் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது பிரிவு அலுவலர் முதல் இயக்குனர்கள்/ செயலாளர்கள் வரையிலான பல்வேறு அதிகாரிகளை கடந்து வர வேண்டும். எவரேனும் ஒருவர் தவறு செய்யலாம்; எல்லா அதிகாரிகளும் எவ்வாறு தவறு செய்ய முடியும்? எனவே, ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்படுவதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அதிகாரிகள் காரணம் அல்ல... கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்கள்தான் காரணம் ஆகும்.
உலக வங்கியுடன் திமுக அரசு செய்து கொண்ட மொத்த செலவு ஒப்பந்தத்தின் (Gross Cost Contract) அடிப்படையில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இது மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்கவே வழிவகுக்கும் என்பதால் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதே காரணத்திற்காகத்தான் அரசு இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை ரத்து செய்தது என்றால், அதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். முடிவை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அந்த மாநில அரசு நன்கு ஆராய்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பதும், அதில் உறுதியாக இருப்பதும் அவசியம் ஆகும். அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததுபோல முடிவுகளை எடுப்பதும், அதை உடனடியாக மாற்றுவதும் நிர்வாகத்திற்கு வலிமை சேர்க்காது. இனி வரும் காலங்களிலாவது அனைத்து முடிவுகளையும் அரசு ஆராய்ந்து எடுக்க வேண்டும்; அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.