சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும் சிப்காட் நிறுவனத்தை 1971-ல் உருவாக்கி 1973-ல் ராணிப்பேட்டையில் முதல் சிப்காட் தொழில் வளாகத்தை தொடங்கி தொடர்ந்து பல சிப்காட் வளாகங்களை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
அதன்பின்னர், ஏறத்தாழ 50 ஆண்டுகளில் 2021 வரை 54 சிப்காட் தொழில் வளாகங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டன. இந்த சிப்காட் தொழில் வளாகங்கள் வாயிலாக புதிய புதிய தொழிற்சாலைகள் தோன்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் ஒரு முன்னணி மாநிலமாக வளர்ந்தது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் தமிழ்நாட்டை 2030 க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்திட இலக்கை நிர்ணயித்தார். அதன்படி, தமிழ்நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்கிட வேண்டும் என்பதில் குன்றா ஆர்வம் கொண்டு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலும் அரசு முறைப் பயணங்கள் மேற்கொண்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளையும் எடுத்துக்கூறி தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட பல முதலீட்டாளர்கள் முன்வந்தனர். அந்த முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்கிட ஐந்தாண்டுகளில் 30 புதிய தொழில் பூங்காக்களைத் தொடங்கினார்கள். 1973 முதல் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் பூங்காக்களில் நடைபெறும் தொழில்களை விரிவுபடுத்திடவும், புதிய தொழில் பூங்காக்களில் புத்தம் புதிய தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்கிடவும் இதுவரை 5 ஆண்டுகளில் 816 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 816 தொழில் நிறுவனங்களுக்கும் மொத்தம் 7,588.798 ஏக்கர் நிலங்களை சிப்காட் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 816 தொழிற்சாலைகளில் தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்வாகனத் தொழிற்சாலை, ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார் தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலை, கிருஷ்ணகிரியில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை முதலான பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிய போர்டு கார் தொழிற்சாலை. மேலும், பல தொழிற்சாலைகள் தொடர்ந்து திறக்கப்பட உள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று வருகின்றனர். இவற்றின் காரணமாக தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாகச் சிறந்து விளங்குகிறது.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என அய்யன் திருவள்ளுவர் கூறியதற்கு ஏற்ப, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம் எண்ணியபடி, தமிழ்நாடு 2030இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவார் என்பது திண்ணம்! திண்ணம்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.