தமிழக செய்திகள்

5 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் - ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை

இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

சென்னை,

இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு, ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.

முதல்-அமைச்சர் நம்பியுள்ளார்

கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என முதல்-அமைச்சர் நம்பியுள்ளார் அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சி.ஐ.ஐ சார்பில் "தமிழ்நாடு உட்கட்டமைப்பு உச்சி மாநாடு 2026" நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசியதாவது:-

சமூக நீதி

அரசியல் ரீதியாக அண்ணாதுரையின் திராவிட நோக்கமான சமத்துவத்தை வைத்து அதிலிருந்து அரசியலாக மாறி அரசு அனைவருக்கும் கல்வி, சமூக நீதி, பொருளாதார விடுதலை அனைவருக்கும் சமமாக கிடைக்க செயல்பட்டு வருகின்றோம். ஜாதி,மத,வேறுபாடு இல்லாமல் அரசு அனைவருக்கும் என்ற சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். எம்ஜிஆர், அண்ணா நோக்கத்தில் இந்த அரசு உருவாகியுள்ளது.

அரசியல் சண்டை

கர்நாடகாவில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் அரசியல் சண்டை நடக்கிறது, ஆனால் நம்மிடம் வளர்ச்சி என்ற நோக்கத்தில் புது மாற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், சம உரிமைக்காகவும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க வேண்டும் என மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். கலைஞர், ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் புது தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

உரிமை

பெண்கள், இளைஞர்கள் புது மாற்றத்தை தந்துள்ளார்கள். மக்கள் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்கள். புதிய அரசு மக்கள் எதிர்பார்ப்பு என்று சொல்வதை விட மக்களின் உரிமையாக அரசு அமைந்துள்ளது.

நோக்கம் தேவை

வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டுமானால் நமக்கு நோக்கம் தேவை, நோக்கம் இருக்க வேண்டும் என்றால் வெளிப்படை தன்மையான அரசு இருக்க வேண்டும்;நம் அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் அரசாக செயல்பட்டு வருகிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு உள்கட்டமைப்பு மிகவும் முக்கியம். போக்குவரத்து, தொழில்நுட்பம், வணிகம் இது மூன்றும் ஒரு அரசுக்கு மிகவும் முக்கியம்.. இந்த மூன்று துறையிலும் தமிழ்நாடு அரசு வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது.

ஊழல் இல்லாத முதல் மாநிலம்

கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். சலுகையின் முக்கிய பிரச்னை ஊழல். கடந்த 80 நாட்களில் அனைத்து வசதிகளையும் இணையவழி மூலமே பெறும் வழிவகையை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு; ஊழல் இல்லா தமிழ் நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.

தமிழ்நாடு வளர்ச்சி

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களிலோ, அமைச்சரின் அலுவலகங்களிலோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து கோப்புகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம். உங்களுடைய முதலீட்டால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு புது வேலை கிடைக்கும். தமிழ்நாட்டில் 19% வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் உள்ளார்கள், மூன்று வருடங்களில் சிறந்த முதலீட்டை தமிழ்நாட்டில் செய்தால் 400 சதவீதம் உள்கட்டமைப்பில் தமிழ்நாடு வளர்ச்சி பெறும்.

கண்டிப்பாக செய்வோம்

*இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய எங்கள் முதல்-அமைச்சர் அதை தூக்கிப் போட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றால் அவருக்கு பணம் ஒரு முக்கிய விஷயம் இல்லை என்று தான் அர்த்தம். அமைச்சர்களாகிய நாங்கள் ஒரு ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்யவில்லை. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சாதி, மதம், பணம் என எதுவும் இன்றி வாக்களித்துள்ளார்கள், என்ன வாக்குறுதி கொடுத்தோமோ அதை மக்களுக்கு கண்டிப்பாக செய்வோம். தவறு செய்தால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என நன்கு அறிவோம்.

பல மாற்றம்

80 நாளில் என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்கிறார்கள், பத்திரப்பதிவுத்துறை, கட்டுமானத் துறை, உணவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் 50 ஆண்டுகள் இல்லாத பல மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐஐடியின் ஆய்வு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், உள்ளிட்ட எல்லாவற்றையும் பொதுப்பணித்துறை தான் கட்டியுள்ளது. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்களை ஆய்வு செய்தால் 10 வருடங்களில் கீழே விழுந்து விடும் என்று ஐஐடியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய கட்டிடம் எப்படி உள்ளது, இப்போது கட்டிய கட்டிடம் எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். எந்தத் திட்டமும் இல்லாமல் கட்டிடத்தை கடந்த கால ஆட்சியாளர்கள் கட்டியுள்ளார்கள். வருகிற பட்ஜெட்டில் முதல்-அமைச்சரும், அமைச்சரவையும் பலவற்றை அறிவிக்க உள்ளோம். ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அடுத்த 50 வருடத்திற்கு அது செயல்பட வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறோம்.

ஊழல்

நெடுஞ்சாலை துறையில் 21,000 கோடி ஒதுக்கினால், அதில் 30 முதல் 40 சதவீதம் நிதி பேட்ச் வொர்க், பழுதுபார்த்தல் செய்துள்ளார்கள். ஏனென்றால் அதில் தான் ஊழலை கண்டுபிடிக்க முடியாது. தொகுப்புப் பணி என கூறி 35 சதவீதம் அதில் ஊழல் செய்துள்ளார்கள்.

ஆறு வருடம்

சிங்கப்பூரில் ஒரு சாலை அமைத்தால் அது ஆறு வருடம் இருக்க வேண்டும் என சொல்கிறார்கள், அப்படி இல்லையெனில் அந்த சாலைக்கு ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு என்று உள்ளது. ஆனால் இங்கு அப்படி இல்லை சில சாலைகள் போடாமலேயே போட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்கள்.

உண்மை

கடன் வாங்கி எந்த கேப்பிட்டல் ஒர்க்கும் நடைபெறவில்லை. அமைப்பு முற்றிலும் தவறானது, இதையெல்லாம் கண்டுபிடிக்க கூடாது என்பதால் தான் அரசியல் ரீதியாக பல திசை திருப்பும் வேலையை செய்கிறார்கள். நிச்சயம் தவறை கண்டறிந்து உண்மையை வெளிக்கொண்டு வருவோம்.

புதிய நோக்கம்

*சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய வகையில் சாலை அமைக்க வேண்டும்.*பெரிய பெரிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும், ஒரு புதிய பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும். ஒவ்வொரு துறையும் ஒரு புதிய நோக்கத்தை, இலக்கை நோக்கிய அறிவிப்பாக இருக்கும்.

இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள்

தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என முதல்-அமைச்சர் நம்பியுள்ளார், அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும். கடந்த ஐந்து ஆண்டு பட்ஜெட் எடுத்தால் கூறிய பட்ஜெட்டையே மீண்டும் காபி செய்து கூறுவார்கள்.

விளையாட்டு தலைநகரம்

வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. தர்மபுரி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி இந்தப் பகுதிகளில் பெண்கள் இன்றளவும் உயர்கல்வி படிக்காமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் என தெரிவித்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.