தமிழக செய்திகள்

தமிழக சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு – ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சென்னை,

நேபாளத்தில் இருந்து பத்திரமாக தமிழக சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்பியதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில தினங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்பிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

தமிழக சுற்றுலாப் பயணிகள்

அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் துரிதமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நேபாளத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களை மத்திய வெளியுறவுத்துறை மந்திரியுடன் இணைந்து நேரில் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.

மனமார்ந்த நன்றி

நெருக்கடியான சூழ்நிலையில் உரிய நேரத்தில் தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட பாரதப் பிரதமர்நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும், பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.