சென்னை,
தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி ஆளுமைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2026-ம் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், (https://skilldevelopment.tn.gov.in/) ஆன்லைன் மூலம் 21.11.2026 முதல் 30.11.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.