சென்னை,
2034-ம் ஆண்டுக்குள் தமிழகம் ரூ.94 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் மகேந்திர தேவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 'விக்சித் பாரத் 2047-ஐ நோக்கிய தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு' என்ற கருத்தரங்கு நடந்தது. அதில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் எஸ்.மகேந்திர தேவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் மாநிலத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு ஏற்கனவே 2036-க்குள் ரூ.141 லட்சம் கோடி (1.5 டிரில்லியன் டாலர்) பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு வருமான உயர்வு மட்டுமின்றி வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு ஆண்டுதோறும் 9 சதவீத உண்மையான பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பதிவு செய்தால், 2033-34-ம் ஆண்டுக்குள் ரூ.94 லட்சம் கோடி (1 டிரில்லியன் டாலர்) பொருளாதாரமாக மாறும்.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சராசரியாக 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. பின்னர் 2012-13 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி சுமார் 6 சதவீதமாக குறைந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் வளர்ச்சி மீண்டும் வேகமடைந்துள்ளது. 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாடு 11 சதவீத உண்மையான ஜி.டி.பி. வளர்ச்சியை பதிவு செய்தது. 2025-26-ம் ஆண்டில் மாநிலம் 13 முதல் 15 சதவீத பெயரளவு வளர்ச்சியும், 10 முதல் 11 சதவீத உண்மையான வளர்ச்சியும் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இளைஞர் வேலையின்மை விகிதம் 14 சதவீதமாக இருக்கிறது. இது தேசிய சராசரியான 9.9 சதவீதத்தை விட அதிகம். இதற்கு காரணம் தமிழ்நாட்டில் கல்வி கற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான். அவர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ற நல்ல வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதால் வேலையின்மை விகிதம் அதிகமாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.