சென்னை,
புதுடெல்லியில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது வழங்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நவம்பர் 13-ம்தேதி முதல் 27-ம்தேதி வரை 15 நாட்கள் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சிகளில் ஒன்றான இக்கண்காட்சியில், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட இக்கண்காட்சியில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரங்கில், அரசின் மகத்தான திட்டங்கள், அரசின் சாதனைகளை குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுற்றுலாத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை போன்ற துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) சார்பில் முதல் பரிசாக "தங்கப் பதக்கம் விருது" இன்று (26.11.2026) வழங்கப்பட்டது.
இவ்விருதினை இந்திய பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜாவேத் அஷ்ரப், மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நீரஜ் கர்வால் ஆகியோரிடமிருந்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ் பெற்றுக்கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.