தமிழக செய்திகள்

நெல்லை அருகே கோவில் விழாவில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து

நெல்லை அருகே கோவில் விழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது.

பெண் சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் நெல்லையை அடுத்த பழவூரில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நடந்தது, இதில் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சரமாரி கத்திக்குத்து

நள்ளிரவு 1 மணியளவில் அங்கு பழவூர் பால் பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் வந்தார். அவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கழுத்து, கன்னம், தோள்பட்டை ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

பின்னர் ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை மற்ற போலீசார் மடக்கிப் பிடித்தனர். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த மார்க்ரெட் தெரசாவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளி கைது

இதற்கிடையே, சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஆறுமுகம் மீது சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் குத்தியது தெரியவந்து உள்ளது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.