தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் வலுவான மருத்துவக்கட்டமைப்பு சரியான கைகளுக்கு சென்றுள்ளது - ஜோதிமணி பதிவு

கரூர் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் மிக நன்றாக அமைச்சர் புரிந்துகொண்டார் என்று ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர்,

கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- கரூர் மாவட்ட மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உடன் இணைந்து, கரூர் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தோம்.

கோரிக்கை

அமைச்சர் மிகுந்த பொறுமையுடன் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக கேட்டார். தானே ஒரு மருத்துவர் என்பதால், மருத்துவ துறையின் நிலவரத்தையும், கரூர் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் மிக நன்றாக புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் வலுவான மருத்துவக்கட்டமைப்பு சரியான கைகளுக்கு சென்றுள்ளது என்பதை உறுதியாக உணர்ந்தேன்.

கடிதம்

புதிய மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்ட பின்னர், தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை மருத்துவம் & செவிலியர் கல்லூரியாக மாற்றியமைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம்.

இக்கல்லூரி நிறுவப்பட்டால்:

1. கரூர் மாவட்டத்தின் இளைஞர்களுக்கு மருத்துவத் துறையில் உயர்கல்வி பயிற்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.

2. மாவட்டத்தில் நிலவும் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை படிப்படியாக நிவர்த்தியாகும்.

3. கரூர் மாவட்டம் சுகாதாரக் கல்வியின் முக்கிய மையமாக உருவெடுக்கும்.

மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வலுப்படுத்த பின்வரும் முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்:

- மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் & அறுவை சிகிச்சை நிபுணர்கள் (4 பணியிடங்கள் - ரூ, 1 கோடி)

- 300 படுக்கைகள் கொண்ட மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவு

- 200 படுக்கைகள் கொண்ட உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு

- புற்றுநோயாளிகளுக்கான ரேடியோ தெரபி சிகிச்சை மையம் (ரூ. 35 கோடி)

- ரூ. 3.40 கோடி மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள்

இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.