தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற தமிழிசை சவுந்தரராஜன் கைது..!

மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

மதுரை,

திருக்கார்த்திகை தீபத்திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், கோவில்களிலும், வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு

இதுதொடர்பாக இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்தும் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு அளித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு

மதுரை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதுதொடர்பாக நடந்த விசாரணைக்குப் பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஆண்டில் மட்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

சீராய்வு மனு மீது விசாரணை இல்லை

இந்த மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் முறையிடப்படும் என நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை விசாரித்த அமர்வு நேற்று இடம்பெறவில்லை.

எனவே தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அமர்விலும் முறையிடப்படவில்லை. இதனால் மறுஆய்வு மனு மீது எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை.

குருநானக் ஜெயந்தியையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று விடுமுறை என்பதால் இந்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெற வாய்ப்பு இல்லை. இதனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் கைது

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாருடன் கடும் வாக்குவாதம்

போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த தமிழிசை சௌந்தரராஜன், காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, "நான் சாமி தரிசனம் செய்வதற்காகத்தான் வந்திருக்கிறேன். என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள். என்னைத் தடுப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்?" என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.

நடந்து சென்றபோது கைது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால், தமிழிசை சௌந்தரராஜன் நடந்தே செல்லத் தொடங்கினார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

SCROLL FOR NEXT