சென்னை,
1956-ம் ஆண்டு தமிழர்களின் நிலப்பரப்பை தமிழ்நாடு என மாற்றக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர் மொழித் தியாகி சங்கரலிங்கனார். அவரது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சங்கரலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, "தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழ் ஓயாது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனார் நினைவு நாள்! வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறுதான் விருதுநகர் தந்த வீரத்தியாகி சங்கரலிங்கனாருடையது. தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்தார். இறுதியில் உயிரையே துறந்தார்.
ஆயினும் அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கழக ஆட்சி அமையும்வரை காலம் கனியவில்லை. வென்றது கழகம்! வந்தார் அண்ணா! நிறைவேற்றினார் தீர்மானத்தை! தமிழ்நாடு தமிழ்நாடானது!
தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல பேரின் போராட்டங்கள், தியாகங்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சளைக்காத முயற்சிகள் அடங்கியுள்ளன. ஆனால், இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை. தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! தமிழ்நாடு வாழ்க! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.