சென்னை,
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஆன்மிக புனிதத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், செல்போன்களை எடுத்து செல்ல இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்திருந்தது. இதற்காக கோவில் வாசல்களில் செல்போன்லாக்கர்கள் அமைக்கப்பட்டு, கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இத்திட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்தே பல்வேறு கோவில்களில் செல்போன் தடை திட்டம் சத்தமில்லாமல் முடங்கி வருகிறதா? என்ற பலத்த கேள்வி தற்போது ஆன்மிக பக்தர்களிடையே எழுந்துள்ளது.
கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது விலையுயர்ந்த செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்கவும், தரிசனம் முடிந்து மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்ளவும் டோக்கன் பெற்றுக்கொண்டு பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அவசர தேவைகளுக்கு குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியாமல் முதியவர்களும், பெண்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதன் காரணமாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட சில முக்கிய தலங்களில் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், தீவிர கண்காணிப்பும் சற்றே தளர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைப்பறை செயல்படாததால், வழக்கம்போல பக்தர்கள் எவ்வித தடையுமின்றி தங்களது செல்போன்களை கோவிலுக்குள் எடுத்து செல்லும் நிலையும் அரங்கேறி வருகிறது.
இதுகுறித்து அறநிலைய துறை வட்டாரங்கள் கூறுகையில், "பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அவசர தேவைகளை கருத்தில்கொண்டு, போன்களை 'சுவிட்ச் ஆப்' அல்லது 'சைலண்ட்' செய்த நிலையில் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனால் இத்திட்டத்தை தொடர்ந்து தீவிரமாக அமல்படுத்துவதா அல்லது சில தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளனர்.