சென்னை,
வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்க வீடுகள்தோறும் சூரிய மின்சக்தி திட்டத்தை கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைக்க மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, சூரிய மின்சக்தியை தொடர்ந்து ஊக்குவிக்க மாநில அரசு சார்பிலும் மானியம் வழங்கப்படும் என்று கடந்த மாதம் (செப்டம்பர்) 21-ந்தேதி அறிவிக்கப்பட்டது.இதன்படி, ஒரு கிலோவாட் மின்சார உற்பத்தித்திறனுக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம், மாநில அரசு ரூ.5 ஆயிரம் என அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இதேபோல் 2 கிலோவாட் மின்சார உற்பத்தித்திறனுக்கு மத்திய அரசு ரூ.60 ஆயிரமும், மாநில அரசு ரூ.10 ஆயிரம் என அதிகபட்சம் ரூ.70 ஆயிரம் வழங்கப்படுகிறது. 3 கிலோவாட் மின்சார உற்பத்தித்திறனுக்கு மேலே இருந்தால் மத்திய அரசு அதிகபட்சமாக ரூ.78 ஆயிரம், மாநில அரசு ரூ.22 ஆயிரம் என அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. சூரிய மின் சக்திக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத் தொகை வழங்குவதையடுத்து, மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் சூரிய மின்சக்திக்கு மானியம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்த 10 நாட்களிலேயே, வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி அமைக்க 16,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். https://www.tnebltd.gov.in/usrp/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ள முடியும் என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.