சென்னை,
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் இடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியார், அண்ணா மாபெரும் சீர்திருத்தவாதிகளை நான் எப்போதும் போற்றி வந்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வந்தனர். அவர்களின் திறமையான நிர்வாகம் சிறந்த தலைமைத்துவத்தை வெளிபடுத்தியது.
இன்றும் கூட சுவாமிநாதன் மற்றும் சோமநாதன் போன்ற தமிழகத்தை சேர்ந்த கேபினட் செயலாளர்களை நாம் பார்க்க முடிகிறது. எனது முதல் தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டின் ராஜாஜி. எனது அமைச்சரவையின் எரிசக்தி துறை செயலாளர் வி.எஸ். சம்பத், அந்த துறையில் பல சிறந்த மாற்றங்கள் கொண்டு வந்ததில் இவரின் முக்கிய பங்கு உள்ளது. பின்னர் அவர் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார். அதை என் சொந்த அனுபவத்தில் நான் பார்த்து வியந்துள்ளேன்.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், அப்துல் கலாம் அவர்கள் இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பல இந்திய குடியரசு தலைவர்களில் அப்துல் கலாம் அவர்களின் தனித்துவமான திறமையான நிர்வாகம் இன்று வரை மக்கள் நினைவுகளில் இருக்கிறது.
தமிழர்கள் எப்போதும் தங்களின் தாய்மொழியாம் தமிழ் மொழியை ஆழமாக நேசிக்கிறார்கள், தாய்மொழியை பாதுகாக்கிறார்கள். இதேபோல் தெலுங்கு மக்களும் தங்கள் மொழியை அடையாளப்படித்துவதில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தமிழில் பேசுகிறார்கள். அது தான் தமிழ் மொழியின் அழகு. ஆந்திராவிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது.
இவ்வாறு அவர் கூறினார்.