தமிழக செய்திகள்

கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம்: தங்கம் தென்னரசு பெருமிதம்

எகிப்தில் உள்ள பழங்கால பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்களில் கீறப்பட்ட கிராபிட்டி கல்வெட்டுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சென்னை,

”சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தின் பிரபலமான மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் உள்ள பழங்கால பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்களில் கீறப்பட்ட கிராஃபிட்டி (graffiti) கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வை பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தின் (EFEO) பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் மற்றும் சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழக பேராசிரியர் இங்கோ ஸ்ரௌச் ஆகியோர் 2024-2025 ஆண்டுகளில் மேற்கொண்டனர். அவர்கள் ஆறு கல்லறைகளில் சுமார் 30 கல்வெட்டுகளை ஆவணப்படுத்தினர். இதில் 20 கல்வெட்டுகள் தமிழ்-பிராமி எழுத்து இடம்பெற்றுள்ளது. இதன்முலம் ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்தது உறுதியாகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு இருப்பதாவது;

“கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது. எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.

ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பு தமிழர்களின் கடல் கடந்த வர்த்தகத் திறன், நாகரிக பங்களிப்பு ஆகியவற்றை உலக அளவில் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும் தமிழர்களின் பழங்கால உலக வர்த்தகத் தொடர்புகளுக்கு ஒரு வலுவான சான்று கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.