சென்னை,
வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளது.
வியட்நாம் படகு விபத்தில் இறந்த பழனியைச் சேர்ந்த முருகபிரபு, செல்போன் கடை உரிமையாளர் ஆவார். செல்போன் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டதால் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் சார்பில் முருகபிரபு, அவரது நண்பர் நிர்மல்குமார் ஆகியோரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்றது. படகுசவாரி சென்றபோது படகு கவிழ்ந்து முருகபிரபு உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற நிர்மல்குமார், மற்றொரு படகில் சென்றதால் உயிர் தப்பினார்.
உயிரிழந்த முருகபிரபு, நேற்று காலை தனது செல்போனில் வியட்நாமில் சுற்றுலா சென்ற இடங்களில் எடுத்த படங்களை வாட்ஸ்-அப்பில் 'ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். அதனை அவரது நண்பர்கள், உறவினர்கள் பார்த்துள்ளனர். அதுவே அவரது கடைசி 'ஸ்டேட்டஸ்' ஆக அமைந்துவிட்டது.
இந்த விபத்தில் தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் என்பவரும் இறந்தார். செல்போன் டீலராக இருந்த இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பில் உறுப்பினராக இருந்த செந்தில்குமார் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
பலியான தொழிலதிபர் செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதனால் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செல்போன் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை அனுப்பினார்கள். தர்மபுரியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் அவருடைய பிறந்தநாளை கொண் டாடும் வகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
பிறந்த நாளில் மகிழ்ச்சியாக வியட்நாமில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவர் படகு கவிழ்ந்த விபத்தில் பலியான சோக சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது
படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களில் அழகுராஜன், பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகிய 3 பேரும் திருச்சியை சேர்ந்தவர்கள். இதில் அழகுராஜன் தனியார் செல்போன் நிறுவனத்தின் திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்ட விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். பாலாஜி செல்போன் வினியோகஸ்தர் ஆவார்.
தொழில் அதிபரான ஷேக் அப்துல்லா செல்போன் விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். 3 மாத விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்ததால் செல்போன் கம்பெனி சார்பில் அழகுராஜன், வினியோகஸ்தர்களான பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகியோர் உள்பட பலரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக அனுப்பி வைத்துள்ளது.
இந்த விபத்தில் இறந்த அழகுராஜன் திருச்சி கிராப்பட்டி அருணாசலம் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் சரவண பிரியா (34) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சிவசாய்ராம் (14), சிவசாய் நிரஞ்சன் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில் அழகுராஜன் இறந்து விட்டார் என்ற தகவல் வெளியானதும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதனர். இதனால் அவர்களது வீடு மட்டுமின்றி அந்த தெருவே சோகமாக காணப்படுகிறது.
விபத்தில் இறந்த பாலாஜி திருச்சி திருவானைக்காவல் கீழக்கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர். விஷ்ணுபிரியா (41) என்ற மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் ரமேஷ்ஜி, 5-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீசித்து ஆகிய மகன்களும் உள்ளனர்.
கடந்த 9-ந் தேதி திருச்சியில் இருந்து பாலாஜி புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த பாலாஜி, நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் செல்போனில் பேசியுள்ளார். நேற்று யாரிடமும் பேசவில்லை. இதுகுறித்து பாலாஜியின் சித்தப்பா கோவிந்தன் கூறுகையில் ‘படகில் பயணித்த யாருக்கும் உயிர் காக்கும் ‘லைப் ஜாக்கெட்' கொடுக்கவில்லை. இதனால்தான் பாலாஜி உள்ளிட்டோர் அநியாயமாக உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகள் உயிரிழந்தோரின் குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்' என்றார்.
படகு விபத்தில் இறந்த ஷேக் அப்துல்லா திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவும், செல்போன் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார். இவருக்கு நசிமாபானு என்ற மனைவியும், சாகில் என்ற மகனும், சபானா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். செல்போன் விற்பனையில் இலக்கை எட்டியதற்காக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பை தனியார் நிறுவனம் வழங்கியபோது ஷேக் அப்துல்லா தனது மகனை அனுப்பலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவரது மகன் தனக்கு வேலை இருக்கிறது என்று கூறிவிட்டதால், அரைமனதோடு சுற்றுலா சென்றிருக்கிறார்.
கடந்த புதன்கிழமை திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற இவர் நாளை (திங்கட்கிழமை) திருச்சிக்கு திரும்புவதாக இருந்தது. சுற்றுலா பயணத்தில் இருந்தபோது தினமும் குடும்பத்தினருடன் செல்போன் மூலம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். நேற்று காலை 10 மணி அளவில் கூட பேத்தியிடம் பேசி கொஞ்சியிருக்கிறார். இந்த நிலையில் தான் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையை சேர்ந்த தொழில் அதிபர் பாபுவும் இந்த விபத்தில் இறந்தார். ரேவதி (43) என்ற மனைவியும், ஜஸ்வந்த் (21) என்ற மகனும், நேகா (19) என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வியட்நாம் நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
உயிரிழந்த 15 பேரில், 10 நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு விவரம்:-