சென்னை,
அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசினர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-ம் ஆண்டு எழுதப்பட்ட மனோன்மணியம் என்ற நாடக நூலின் பாயிரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து 1970-ம் ஆண்டு நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
2021-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் மாநில பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதிய கடிதத்தில், மாநில பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆகவே, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவந்த இந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.