தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைய வழி சொன்ன தமிமுன் அன்சாரி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிமுன் அன்சாரி வாழ்த்து பெற்றார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிமுன் அன்சாரி, “தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அப்போது அவரிடம், ‘நீங்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததால் எங்களால் இந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியவில்லை. சிதம்பரம் தொகுதியில் நான் ராஜினாமா செய்கிறேன், இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள்’ என்று கூறினேன்.

அதற்கு மு.க ஸ்டாலின், ‘என் கையை பிடித்துக் கொண்டு, அப்படியெல்லாம் பேசக்கூடாது. நீங்களும் சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வாழ்த்து கூறி அனுப்பினார்” என்று தெரிவித்தார்.