சென்னை,
தரம் தாழ்ந்து பேசிப் பேசியே அழிவை நோக்கிச் செல்லும் திமுக எத்தனை பட்டாலும் திருந்திய பாடில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக் கூட்ட மேடையில், தவெக வேட்பாளர் அவர்களைப் பற்றி உருவ கேலி செய்யும் விதமாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது.
பிரசார மேடைகளிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் தொடர்ந்து பேசி வரும் தந்தையும் மகனும் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து பெண்களை அநாகரீகமாக பேசி வருவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற பேச்சுக்களை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்றுக் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கத் திராணியின்றி அநாகரீக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பதுதான் திமுகவின் 70 வருட பிரசார முறையா? தரம் தாழ்ந்து பேசிப் பேசியே அழிவை நோக்கிச் செல்லும் திமுக எத்தனை பட்டாலும் திருந்திய பாடில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.