மு.க.ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் நாளை ‘ரோடு ஷோ’

நாளை மாலை 5.30 மணிக்கு தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை புறப்பட்டுச் செல்கிறார். பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் தாராபுரம் செல்கிறார். அங்கு அவரை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். தாராபுரத்தில் உள்ள ஓட்டலில் மு.க. ஸ்டாலின் இன்று இரவு தங்குகிறார்.

நாளை காலை (வெள்ளிக் கிழமை) 10.30 மணிக்கு முகஸ்டாலின் காரில் ரோடுஷோ சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

தாராபுரம் நகரத்தில் அமராவதி சிலையிலிருந்து 'ரோடுஷோ' செல்லும் மு.க. ஸ்டாலின் பொள்ளாச்சி சாலை பெரிய கடை வீதி வழியாக பொது மக்களை சந்திக்கிறார். அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.

நாளை மாலை 5.30 மணிக்கு தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. உடுமலை சாலை மல்லி ரிசார்ட் அருகில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாவின் பங்கேற்று பேசுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பிரசார கூட்டத்திற்கு பிறகு மறுநாள் 3-ந்தேதி மதுராந்தகம் சென்று அங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். இதையொட்டி பிரசார சுற்றுப்பயண ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்த மறுநாள் 3-ம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். 3-ந்தேதி மாலை தாராபுரம் தொகுதி நொச்சிப்பாளையம், தளவாய்பட்டம், தாராபுரம் பெரியார் சிலை, தாராபுரம் வடதாரை ஆகிய இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

SCROLL FOR NEXT