தமிழக செய்திகள்

பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் படுக்கை வசதி கொண்ட 260 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.பில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் பகல் நேரத்தில் மட்டும் இயக்கப்படுவதால் முழுக்க முழுக்க இருக்கை வசதி மட்டுமே கொண்டது.

இதற்கிடையே, இரவு நேரங்களிலும் வந்தே பாரத் ரெயில்களை இயக்கும் வகையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் சேவை ஹவுரா-கவுகாத்தி இடையே கடந்த ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதிவேக ரெயில் சேவை மற்றும் படுக்கை வசதி கொண்டது என்பதால் இரவு நேர பயணிகளிடம் இது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலை இயக்க மத்திய ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதாவது அடுத்த 3 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய ரெயில்வே வாரியத்திடமிருந்து பெரம்பூர் ஐ.சி.எப். ஆலைக்கு தொடர்ச்சியாக ஆர்டர்கள் வந்தவாறு இருக்கிறது. அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் படுக்கை வசதி கொண்ட 260 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ஐ.சி.எப். இலக்கு நிர்ணயித்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT