சென்னை,
டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.02.2026) வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று மாலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று (18.02.2026) மற்றும் நாளை (19.02.2026) என இரண்டு நாட்களும் அமைச்சர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதால், வேலை நிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பேச்சுவார்த்தையின் முடிவுகளைப் பொறுத்து வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
கடந்த 01.02.2026 முதல் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சங்கத்தின் உறுப்பினர்கள் அணி திரண்டு வந்து போராட்டம் வெற்றி பெற மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு ஒன்றிணைந்து காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.