சென்னை,
டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏ.ஐ.டி. சி., சி.ஐ.டி.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் சார்ந்த தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டங்களுக்கு ஆதரவாக மற்ற தொழிற்சங்கங்களும் ஆதரவளித்து கூட்டமைப்பாக தற்போது போராட்ட களத்தை வலுப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்தை மேலும் தீவிர படுத்தி உள்ளனர். நாளை முதல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். தற்போது இந்த போராட்டத்தை ஒருநாள் தள்ளி வைத்துள்ளனர். நாளை நடைபெறுவதாக இருந்த இந்த போராட்டம் 18- ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
'டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு என்று உருவாக்கப்பட்டு நாளை மாவட்ட மேலாளர் அலுவலகம் வாயில் அருகே வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடத்துவது எனவும் 18-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.