தூத்துக்குடி,
தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம், காமராஜர்நகர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, சக்கம்மாள்புரம் பகுதி பொதுமக்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர் இயக்கமாக போராடி வந்தனர்.
இந்த போராட்டத்தை முன்னாள் ஊராட்சி துணை தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா முன்னின்று வழி நடத்தினார். அவர் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஆவணங்கள் திரட்டுதல், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்தல் மற்றும் ஜமாபந்தி முகாம்களில் மேல்முறையீடு செய்தல் என அனைத்து சட்டப்பூர்வ வழிகளிலும் உறுதியோடு போராடினார். இவருடன் கிராம விவசாயிகள் வேல்சாமி, சரவணன், முன்னாள் வார்டு உறுப்பினர் குணபாலன் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் தொடர்ந்து களம் நின்றனர். பொதுமக்களின் 6 ஆண்டு கால விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாக நேற்று இந்த டாஸ்மாக் கடை முழுமையாக மூடப்பட்டது.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள, கிராம மக்கள் வீதிகளில் திரண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பட்டாசுகள் வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்தும் தங்களது வரலாற்று வெற்றியை திருவிழா போல கொண்டாடினர்.