தூத்துக்குடி,
தமிழகத்தில் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல்-அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 45 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். இதன் முதற்கட்டமாக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நேற்று மாலை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை உடனடியாக மூடப்பட்டுள்ளது. இதேபோல் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ள மற்ற கடைகளும் அடுத்த 15 நாட்களுக்குள் படிப்படியாக மூடப்படும்" என்று தெரிவித்தனர்.
பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மதுக்கடைகள் இருப்பதால் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும், தேவையற்ற சச்சரவுகளும் ஏற்பட்டு வந்தன. தற்போது இந்தக் கடை மூடப்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசின் இந்தச் செயலை வரவேற்றுப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.