தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடை விவகாரம்: செங்கல்பட்டு கலெக்டருக்கு ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கை

திம்மராஜகுளம் கிராமத்துக்கு செல்லும் குறுகிய சாலையில் டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் செயல்படுகிறது.

சென்னை,

வருகிற 14-ந்தேதிக்குள் டாஸ்மாக் மதுகடையை அகற்றாவிட்டால் செங்கல்பட்டு கலெக்டர் நேரில் ஆஜராக நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.

டாஸ்மாக் கடை

சென்னை ஐகோர்ட்டில், சி.கலையரசி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "செங்கல்பட்டு மாவட்டம், திம்மராஜகுளம் கிராமத்துக்கு செல்லும் குறுகிய சாலையில் டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் செயல்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரிதும் சிரமத்தை தருகிறது. இங்கு வந்து செல்லும் மதுபிரியர்களால் பெண்கள், குழந்தைகள் பயத்தில் வாழவேண்டியதுள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி கடந்த 2024 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பயன் இல்லை” என்று கூறியிருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட நேரம்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, டாஸ்மாக் கடை விதிகளுக்கு எதிராக குடியிருப்பு பகுதியில் இருந்தால், அதை உடனே அகற்றவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கடை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று செங்கல்பட்டு கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது. டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மதுபான கடை 3 மாதங்களில் காலி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவுச் செய்து கொண்ட ஐகோர்ட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

ஐகோர்ட்டு எச்சரிக்கை

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல் டி.ஜெயராமராஜ் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி என்.செந்தில்குமார். "வருகிற 14-ந்தேதிக்குள் கடையை அகற்றவில்லை என்றால் கலெக்டர் ஆஜராக உத்தரவிட நேரிடும்" என்று எச்சரிக்கை செய்தார்.

SCROLL FOR NEXT