தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை காவல்துறை அதிகாரிகள் புகைப்படம் எடுத்து குழுவில் பதிவிட வேண்டும் என போலீஸ் கமிஷனர் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக மே 10-ம் தேதி விஜய் பொறுப்பேற்றார். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற 3 அறிவிப்புகள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் ஒன்று போதைப் பொருள் தடுப்புக்கான பிரிவுகளை உருவாக்குவது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை புதிய அறிவிப்பு ஒன்றை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. அதில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த 2 வாரத்துக்குள் மூட, முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் சென்னை காவல் ஆணையர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அனைத்து காவல்துறைக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், “சென்னையில் FL1 (TASMAC & ELITE TASMAC) கடைகள் இரவு 10.00 மணிக்குள் மூடப்பட வேண்டும். FL2 மற்றும் FL3 கடைகள் முறையே இரவு 10.00 மற்றும் 12.00 மணிக்குள் மூடப்பட வேண்டும். மேற்கண்டவற்றை Patrol, Gipsy Patrol, Additional Patrol மற்றும் Sector Beat Officers கண்காணித்து, புகைப்படங்களை குழுவில் பதிவிட வேண்டும்.

FL2 & FL3 கடைகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நேரத்தைத் தவிர, வேறு எங்கும் விற்பனை செய்யக்கூடாது. Loose Selling லூஸ் செல்லிங் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட விதிமுறைகள் மீறப்பட்டால், அதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.