செங்கல்பட்டு,
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பணிகள் மற்றும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலும் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
இடைத்தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கும் வகையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
இதனால் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மதுபான விற்பனை நடைபெறாது. டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்வது தொடர்பாக விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெறுவதற்காக மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.