சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி), கடந்த 20 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றன. இதில் 15 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அஇஅதிமுக இருந்த காலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து வாய்திறக்கவில்லை.
மாறாக மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (எம்ஆர்பி) கூடுதல் விலைக்கு விற்று, பணியாளர்கள் பெருமளவு சம்பாதித்து வரும் குற்றவாளிகளாக சித்தரித்து வந்தது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிக்கவும் முன்வராத முன்னாள் முதல்-அமைச்சர், இன்றைய ஆட்சி குறித்து பேசும் தார்மீகத்தை இழந்தவர். கடந்த சில நாட்களாக பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் பெரும் பகுதி தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து, ஒன்றுபட்டு போராடிக் கொண்டுள்ளன.
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, இன்று (05.02.2026) அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அஇஅதிமுக டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவதாக அறிவித்திருப்பது தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும் என்பதை பணியாளர்களும், பொதுமக்களும் நன்கறிவார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் தீர்ப்பு உணர்த்தும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. என தெரிவித்துள்ளார்.