காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மேவலூர்குப்பத்தில் உள்ள மதுபான ஆலையில் தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், “இதுபோல் எங்கெல்லாம் கூடுதலாக பணம் வாங்குகிறார்கள் என்று தெரிய வருகிறதோ, அங்கெல்லாம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பழக்கம் பல வருடங்களாக இருந்துள்ளது. எனவே திடீர் மாற்றத்தை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வாங்குவதை த.வெ.க. அரசு கடுமையாக எதிர்க்கிறது. நுகர்வோரின் பணம் தனிநபர்களின் கைகளுக்கு போகக்கூடாது என்பதற்காகத்தான் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். நானும் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்க்கிறேன். டாஸ்மாக் கடையில் அதிகமாக பணம் கேட்கிறார்கள் என்று கூறி வீடியோ போடுகிறார்கள்.
இவ்வாறு சமூக வலைதளங்களில் வரக்கூடிய கடைகளுக்கு நீங்கள் அடுத்த நாள் நேரில் சென்று பாருங்கள். தவறான நடைமுறையில் ஈடுபட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் அந்த பணியில் இருக்க மாட்டார்கள். அரசுக்கும், மக்களுக்கும் எது நல்லதோ அதைத்தான் நாங்கள் செய்வோம். வியாபார நோக்கத்தில் இந்த துறையை அரசு பார்க்காது. இந்த துறையில் சம்பாதித்து அரசு நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதல்-அமைச்சர் விஜய்க்கு கிடையாது. அந்த எண்ணம் இருப்பதால்தான் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
மேலும் 717 கடைகள் மூடப்பட்டுவிட்டனவா? மூடப்பட்ட கடைகளின் பட்டியல் எங்கே? என்று சிலர் கேட்கிறார்கள். மூடப்பட்ட கடைகளின் விவரங்கள், அந்த கடைகளின் எண்களோடு ஊடங்களிலும், சமூக வலைதளங்களிலும் எப்போதோ வெளியாகிவிட்டன. சந்தேகம் இருந்தால் அவற்றை சரிபார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.