காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் குடும்பத்தகராறில் மகனை தந்தை கத்திரிக்கோலால் குத்திக்கொன்றார்.
காஞ்சீபுரம் மாநகராட்சி அறப்பெரும் செல்வி தெரு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). பூக்களை மாலையாக கட்டி வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் ரூபேஷ்(22), டாட்டூ கலைஞர். காதல் திருமணம் செய்திருந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு முற்றிய நிலையில் மகன் ரூபேஷ் திடீரென வீட்டில் இருந்த கத்திரிக்கோலை கொண்டு வந்து தந்தை ஏழுமலையை குத்த முயன்றார்.
இதை தடுத்த ஏழுமலை கத்திரிக்கோலை பறித்து மகன் ரூபேஷை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ரூபேஷ் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூபேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபேஷின் தந்தை ஏழுமலையை கைது செய்தனர்.