சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டண உயர்வை காரணம் காட்டி, வரும் ஜூன் 15-ம் தேதி முதல் லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்துவதாக நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு அதிர்ச்சியளிக்கிறது. லாரி தொழிலைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இது ஒட்டுமொத்த பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.
காய்கறிகள், மளிகைப் பொருட்கள், பால், மருந்துகள், கட்டுமானப் பொருட்கள் என அன்றாடத் தேவைக்கான அனைத்துப் பொருட்களும் லாரிகள் மூலமே கடத்தப்படுகின்றன. வாடகை 25 சதவீதம் உயர்ந்தால், இந்த அனைத்துப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு, இந்த மறைமுக விலைவாசி உயர்வு மேலும் பொருளாதார ரீதியாக மிகுந்த அழுத்தம் தரும். போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும் போது, சிறு குறு தொழில்கள் முடங்கும், உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இறுதியில், அதன் மொத்தப் பாரமும் நுகர்வோரான பொதுமக்கள் மீதே சுமத்தப்படும்.
லாரி உரிமையாளர்களின் தரப்பில் உள்ள நியாயங்களை மறுப்பதற்கில்லை. சுங்கக் கட்டண உயர்வும், டீசல் விலையும் அவர்களை நசுக்குகிறது என்பது உண்மைதான். ஆனால், அதற்கான சுமையை மக்கள் மீது ஏற்றுவது தீர்வாகாது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
லாரி தொழிலைப் பாதுகாக்க டீசல் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களைப் பாதிக்கும் இந்த 25 சதவீதம் வாடகை உயர்வு முடிவை லாரி உரிமையாளர்கள் சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.