டிடிவி தினகரன் 
தமிழக செய்திகள்

நெல் கொள்முதலில் தன்னிச்சையான முடிவை எடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் தவெக அரசு - டிடிவி தினகரன்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

கடன் சுமையைக் குறைக்க தவெக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) மூலமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நடைமுறையை மாற்றி, கூட்டுறவுச் சங்கங்களின் (Cooperative societies) மூலமாக கொள்முதல் செய்ய முயற்சிக்கும் அரசின் முடிவு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொள்ளும் பணியைக் கூட்டுறவுச் சங்கங்களிடம் ஒப்படைத்து, அதன் பெயரிலும் தேசியக் கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்திடம் கடன் வாங்குவதற்காகவே தமிழக அரசு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவிலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்விலும், பொருளாதார வீழ்ச்சியிலும் முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருக்கும் தவெக அரசு, தான் வாங்கும் கடனைக் குறைப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், எப்படி எல்லாம் கடன் வாங்கலாம் எனப் புதிது புதிதாகச் சிந்தித்துக் கொண்டிருப்பது அரசு நிர்வாகத்தின் நிதி மேலாண்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.

பயிர்க்கடன் தள்ளுபடி எனும் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், காவிரியில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் முன்வைக்கும் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க மறுக்கும் தவெக அரசு, அவர்களிடம் எந்தவொரு கருத்தையும் கேட்காமல் நெல் கொள்முதலில் தன்னிச்சையாக எடுத்திருக்கும் இத்தகைய முடிவு அப்பட்டமான விவசாய விரோதப் போக்காகும்.

எனவே, நெல் கொள்முதலில் பின்பற்றப்பட்டு வரும் தற்போதைய நடைமுறையில் எவ்வித மாற்றமுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவே நெல் கொள்முதல் செய்வதோடு, கடன் சுமையைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT