கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்ம லையில் அரசு ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 100 மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர் இப்பள்ளிக்கு சென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் பள்ளியில் தற்காலிக கணினி ஆசிரியராக பணியாற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்பழகன் மகன் சுரேஷ் (வயது 42) என்பவர், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்தனர். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் கரியாலூர் போலீசார் சம்பந்தப்பட்ட உண்டு உறைவிடப்பள்ளிக்கு சென்று மாணவிகளி டம் விசாரணை நடத்தினர். அதில் கணினி ஆசிரியர் சுரேஷ், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து விடுதி காப்பாளர் கிருத்திகா கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.