AI Image 
தமிழக செய்திகள்

பட்டப்பகலில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை... மர்ம நபர்கள் துணிகரம்

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற துணிகரத் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் பட்டப்பகலில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து, 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி அலங்கார மாதா திருத்தலம் அருகே வசித்து வருபவர் சோனியா (40 வயது). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பென்சியஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

சோனியா தினமும் காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்குச் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் (18-ம்தேதி) காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சோனியா அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் கன்னியாகுமரியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT