தமிழக செய்திகள்

மாதவிடாய் காரணமாக மாணவியை வெளியே நிற்க வைத்த ஆசிரியர் - நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழகப் பெண்கள் முன்னேற்றத்தில் விழுந்த பெரும் கீறல் இது என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் மாதவிடாயின் போது துர்நாற்றம் வீசுவதாகக் காரணங்காட்டி, 11 வயது அரசுப் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியேயே பள்ளி முடியும் வரை நிற்க வைத்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

பெரும் கீறல்

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதியில்லாமையாலும் தண்ணீர் வசதி இல்லாமையாலும் பல பெண் குழந்தைகள் மாதவிடாய் காலங்களில் பள்ளிக்குச் செல்வதற்கே தயங்கும் வேளையில், இப்படி ஒரு பிற்போக்கான சம்பவம் மாநிலத் தலைநகரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே நடந்திருப்பது, தமிழகப் பெண்கள் முன்னேற்றத்தில் விழுந்த பெரும் கீறல்.

இவ்விஷயத்தை தமிழக முதல்-அமைச்சர் உடனடியாகக் கருத்தில் கொண்டு, புகாரை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுத்து, இது போன்ற குறுகிய மனப்பான்மை மேலும் வளரவிடாமல் தடுக்க வேண்டும்! அத்தோடு நில்லாது, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.